Saturday, December 26, 2009

வாழ்வின் நோக்கம்.

இராஜயோக தியானம்-4





முற்றிலும் அமைதியில் ஆழ்ந்திருக்க கற்று கொள்ளுங்கள். நல்ல ஒரு அமைதி தன்னை ஒரு ஆத்மா எனவும் பரம்பொருள் பரமாத்மா தன் தந்தை எனவும் அறியும் போது ஏற்படும். தியானம் என்றாலே தன்னையும் பரமாத்மாவையும் புரிந்து இருப்பது ஆகும். எந்த ஒன்றையும் நாம் நன்றாக புரிந்திருக்கும் போது நமது புத்தி நன்றாக செயல்படுகிறது. நமது மனம் அமைதியில் இருக்கும் போதே நமது புத்தி நன்றாக செயல்படும்.

நமது உணர்வுகள் எதுவானலும் நம் கண்கள் அந்த உணர்வுகளை காட்டிவிடும். நமது உணர்வுகள் ஒருபோதும் புதை உண்டிருக்காது. வாழ்வில் நல்ல தகுதிகளை அடைய விரும்பினால் மனம் புத்தியை இறைவனிடம் குவிக்க கற்று கொள்ள வேண்டும். மற்றும் தேவையற்ற எண்ணங்களை தடுத்து நிறுத்தும் சக்தி வேண்டும். நமது கவனம் இறைவன் மீது இல்லாது இருந்தால் நாம் எம்மதத்தை சார்ந்தவராக இருப்பினும் நமது மனம் அமைதியாக இருக்காது.

அதன் விளைவாக நாம் கவலைப்பட நேரும். சந்தோஷம் இராது.

நமது விருப்பம் ஒன்று மனம் புத்தியை இறைவனிடம் குவிப்பதாக இருக்கட்டும் இரண்டாவது நமது வாழ்வின் முக்கியத்துவத்தை கண்டு கொண்டவராக இருக்க வேண்டும். இறைவன் நம் வாழ்வில் எதை விரும்புகிறார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அமைதியின்றி இவ்வுலகில் வலம் வர நாம் இவ்வாழ்கையை எடுத்து கொள்ள வில்லை. வாழ்வின் நோக்கமே அமைதியாக மகிழ்ச்சியாக சிரித்து வாழ்வதற்கே என உணர வேண்டும். மற்றவர்களும் அப்படி இருக்க இடம் தர வேண்டும். சுய நலமின்றி நமது சந்தோசத்தையும் அமைதியையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். சுய நலம் நம்மிடம் இருந்தால் தற்காலிக சந்தோசத்தையே உணர முடியும் மற்றவர்களுக்கு நாம் தரும் சந்தோசமும் தற்காலிகமானதாகவே ஆகிவிடும். மற்றவருக்கு ஒத்துழையுங்கள் ஆனால் சுய நலம் அதில் இருக்க கூடாது. நம் வாழ்வை பார்த்து மற்றவர்கள் நல் வாழ்வைகற்று கொள்ளட்டும். மற்றவர்களுக்கு தரும் இந்த உபகாரமே நல்ல கர்மம் ஆகும். என் ஆன்மீக உடன் பிறப்புகளே நல்ல கர்மம் செய்ய இராஜயோக தியானம் கற்க வாருங்கள்.

ஓம் சாந்தி

Thursday, December 24, 2009

மறக்க ஒரு மனம் வேண்டும் - தியானம் 3




இராஜயோக தியானம்

ஒவ்வொருவரும் வாழ்வில் பல விசயங்களை நினைவில் வைத்திருக்கிறோம். நமக்கு பயனற்ற விசயங்கள் துன்பம் தரும் விசயங்களையும் நம்மால் நினைவில் வைத்து கொள்ள முடிகிறது. அந்நினைவுகள் இயற்கையானதாகவும் தானாகவும் வருவதாக உள்ளது. எதை நினைவில் வைப்பது, எதை நினைவில் வைக்ககூடாது என்பது முக்கியம். நமக்கு சக்தியை அளிக்க கூடியதையே நினைவில் வைக்க வேண்டும். நமது சக்தியை அழிக்க கூடியதை நினைவில் வைக்க கூடாது. தங்கள் துன்பத்திற்கு காரணமான நபரையோ சூழ்நிலையோ பலர் நினைவில் வைக்கின்றனர். சில நேரம் உங்களால் அழக்கூட முடியாதளவு அந் நினைவுகள் வலியை தருகிறது. இப்படிப்பட்ட நினைவுகளால் உங்களுக்கு பயன் ஏதும் இல்லை.


மனம் அலைவதால் அமைதியாக இருக்க முடிவதில்லை. சில நேரம் நம்மை யாராவது வெறுத்தாலும் நமக்கு பிடிப்பதில்லை. சில நேரம் நம்மை யாராவது விரும்பினாலும் அதுவும் நமக்கு பிடிப்பதில்லை. புத்திதான் இவைகளை உணர்கிறது. அனுபவம் செய்கிறது. மனம் அலையும் போது புத்தி களைப்படைந்து விடுகிறது. அப்போது நாம் நம்பிக்கையை இழந்து விடுகிறோம்.

சிலர் தியானம் என்ற வார்த்தையை கேட்டு குழப்பம் அடைகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலான சக்தி கொண்ட பரம்பொருளிடம் தொடர்பையும் உறவையும் ஏற்படுத்தி கொள்வதே தியானம் ஆகும். நான் பரம்பொருளை (இறைவனை) புரிந்து அறிந்து பின்னர் அவருடன் எல்லா உறவுகளையும் அனுபவம் செய்யும் போது நமது புத்தியில் தெளிவு வந்து விடுகிறது. இறைவனே அனைத்து ஆத்மாக்களுக்கும் தாயாக தந்தையாக ஆசிரியராக சத்குருவாக நண்பனாக இருக்கிறார். அவர் எல்லைக்கு அப்பாற்பட்டவர். அவரோடு உங்கள் தொடர்பையும் உறவையும் வைத்துப் பாருங்கள். அவருடைய குரல் உங்கள் செவியில் கேட்பது நன்றாக அனுபவம் ஆகும்.

இராஜயோக தியானம் பற்றிய இத்தொடரை படிக்கும் ஆர்வலர்கள் அனைவரும் இறைவன் தொடர்பில் வரவேண்டும் என்ற வேட்கையில் இருக்கும் உங்கள் சகோதர ஆத்மா.

சிவசித்தன் சகோதரரே

தொடர்பில் வந்தமைக்கு மகிழ்ச்சி. தியானம் செய்வது என்பது நம்மால் எவ்வளவு நேரம் இயலுமோ அவ்வளவு நேரம் தியானம் செய்யலாம். இருப்பினும் தினசரி செய்யும் நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டே செல்லுங்கள். பின்னர் நீங்கள் அன்றாட பணிகளில் ஈடுபடும் போதும் உள்முகமாக தியானம் செய்து கொண்டே இருப்பீர்கள். இதுவே கர்ம யோகம்.

Tuesday, December 22, 2009

இராஜயோக தியானத்தின் மகிமை.





இராஜயோக தியானம்


நாம் செல்லும் பயணத்திலே மிக முக்கியமான பயணம் உள் முகமாக செல்லும் பயணமே ஆகும். நாம் யார் என்ற உண்மையை தேடும் பயணம் இது. ஆன்மீக சக்தியின் பிறப்பிடமே உள்முகமாக செல்லும் பயணத்தில் தான் உள்ளது. ஆன்மீக சக்கி ஆக்கபூர்வ எண்ணத்தை தரும். அதில் அன்பு அமைதி ஒத்துப்போகும் தன்மை மிளிரும்.


இராஜயோக தியானம் நம்மைப் பற்றி ஆன்மீக புரிதலை தருகிறது. நம்மை நாம் தேடிப் பிடிக்க அது உதவுகிறது. நம்மிடமுள்ள நேர்மையான தன்மைகளை வெளிப்படுத்துகிறது. ஒழுக்க மேம்பாட்டை தருகிறது. நம் எண்ணங்களை உணர்வுகளை சீரழிக்கும் விசயத்திலிருந்து நம்மை காப்பாற்றுகிறது. இராஜயோக தியானம் நம்மை ஆத்மா என அறிய வைத்து தூய சக்தி உயர்ந்த உணர்வின் சுரங்கமாக விளங்கும் பரமாத்மா தந்தையுடன் நேரிடை தொடர்பை தருகிறது. மிக உயர்ந்த தொடர்பு இதுவே. ஒவ்வொரு மனித ஆத்மாவிற்கும் இறுதியாக பெறக் கூடிய இந்த உறவின் அனுபவத்தை பெறும் உரிமை உள்ளது.


இராஜயோக தியானத்தை கற்று உங்கள் பிறப்புரிமையை பெற இந்த வலைதளம் மூலமாக அழைப்பு விடுக்கும் உங்கள் சகோதர ஆத்மா.

Saturday, December 5, 2009

இராஜயோகம்!!!.....

Prajapitha Brahma

ஓம் சாந்தி

அறிமுகம்

ஓம் சாந்தி - இவ்விரு வார்த்தைகள் இராஜயோக கல்வியின் முக்கியத்துவத்தை விளக்குவதாக இருக்கிறது. ஓம் எனில் நான் ஒரு ஆத்மா. சாந்தி எனில் அமைதி. ஆகவே ஓம் சாந்தி எனில் நான் ஒரு அமைதியான ஆத்மா. என்னால் எவ்வளவு நேரம் அமைதியான ஆத்மாவாக இருக்க முடிகிறது என எண்ணிப் பாருங்கள். கடந்த 24 மணி நேரத்தை சோதித்துப் பாருங்கள் - நான் அப்படி அமைதியான ஆத்மாவாக இருந்தேனா?.

சூழ்நிலை சிரமமான ஒன்றாகவே இருந்துள்ளது. அமைதியை தேடப் போய் அமைதியின்மையில் தான் வந்துள்ளேன். இயற்கையான அமைதி உணர்விலிருந்து வெகு தொலைவு விலகி வந்ததையே என்னால் உணரமுடிகிறது.

இராஜயோக கல்வி மூலம் எளிதாக இயற்கை நிலையான அமைதியில் இருக்க ஆத்மாவால் முடிகிறது. நான் யாராக இருக்கிறேன், நான் என்னவாக இருக்கிறேன் என்பதையே இராஜயோக கல்வி நமக்கு கற்று தருகிறது. இராஜயோகா அனைத்து யோகாவிற்கும் அரசனாக விளங்குகிறது. மற்றவர்களுக்கு நான் அரசன் அல்ல.. என் மனத்திற்கு நான் அரசனாக வேண்டும் ஏனெனில் மனம் தான் கவலைகளையும் வெறுப்புகளையும் உருவாக்குகிறது. எனது குறிக்கோள் என் மனதிற்கு நான் அரசனாக வேண்டும். அப்போது தான் என் உடலில் உள்ள கர்ம இந்திரியங்களுக்கும் நான் அரசனாக முடியும். இராஜயோகத்தின் முதல் பாடமே நான் ஆத்மாவாக இருப்பதோடு மட்டுமல்ல ஆத்மா என்ற உணர்வில் இருக்க நம்மை தூண்டுகிறது. இராஜயோகத்தின் இறுதி நிலையில் ஆத்மா எல்லாவித எதிர்மறை ஆதிக்கத்திலிருந்து நம்மை சுதந்திரமாக வைக்க முடிகிறது. முழுமை நிலையில் நிலைக்க முடிகிறது. வாருங்கள் வலைப்பூக்கள் நண்பர்களே நாமும் இராஜயோக கல்வியை கற்கலாம்.